குன்னூர்அருகே பயங்கரம்: தங்கும் விடுதியில் சுற்றுலாபயணி அடித்துக் கொலை, 2 வாலிபர்கள் கைது


குன்னூர்அருகே பயங்கரம்: தங்கும் விடுதியில் சுற்றுலாபயணி அடித்துக் கொலை, 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 17 Jun 2018 6:00 AM IST (Updated: 17 Jun 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே தங்கும் விடுதியில் சுற்றுலா பயணியை அடித்து கொன்ற வழக்கில் கோவையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

குன்னூர்,

கோவை வடவள்ளி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் கோகுல்நாத் (வயது 23). இவர் ஒரு பிஸ்கட் கம்பெனியின் நீலகிரி மாவட்ட வினியோகஸ்தராக உள்ளார். இவரது நண்பர் கோவை மருதுபுரத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் வசந்தகுமார் (31). நேற்று ரம்ஜான் பண்டிகை விடுமுறையை கழிக்க குன்னூருக்கு கோகுல்நாத், வசந்தகுமார், மற்றொரு நண்பர் ஆகிய 3 பேரும் வந்தனர். நண்பர்கள் 3 பேரும் குன்னூர் அருகே அணியாடா பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இவர்களது பக்கத்து அறையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட குடும்பத்தினர் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம்இரவு கோகுல்நாத், வசந்தகுமார் மற்றும் நண்பரும் மது அருந்தி விட்டு சினிமா பாடலை சத்தமாக வைத்திருந்தாக தெரிகிறது. மேலும் பக்கத்து அறையில் இருந்த ஆந்திர மாநில குடும்பத்தை சேர்ந்த ரவிகாந்த் (45) என்பவரின் மகளை கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களது செயலை ரவிகாந்த் மற்றும் அவரது உறவினர் கிஷோர் ஆகியோர் தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகறாறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கோகுல்நாத், வசந்தகுமார் இருவரும் ரவிகாந்தை அடித்து தள்ளி விட்டனர்.

இதில் ரவிகாந்த் கீழேவிழுந்து மயங்கினார். உடனடியாக அவரது குடும்பத்தினரும், தங்கும் விடுதி ஊழியர்களும் ரவிகாந்தை குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக ரவிகாந்த் இறந்தார். இது குறித்து வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்–இன்ஸ்பெக்டர் கவுசல்யா ஆகியோர் விரைந்து சென்று ரவிகாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோகுல்நாத், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கோகுல்நாத்தையும் வசந்த குமாரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சுற்றுலா வந்த இடத்தில் அசம்பாவித சம்பவம் நடந்து விட்டதே என்று, ரவிகாந்தின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story