அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் அபேஸ்: கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையன் உருவப்படம்


அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் அபேஸ்: கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையன் உருவப்படம்
x
தினத்தந்தி 21 Jun 2018 3:00 AM IST (Updated: 21 Jun 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்த கொள்ளையனின் உருவப்படம், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரத்தில் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்த கொள்ளையனின் உருவப்படம், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதனை போலீசார் வெளியிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிசி ஆலை உரிமையாளர்

நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரை சேர்ந்த ஆதிமூலம் மகன் சங்கர நாராயணன் (வயது 34). இவர் கீழப்பாவூர், ராஜபாண்டி ஆகிய பகுதிகளில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு வங்கிக்கு மொபட்டில் சென்றார். அங்கு காசோலையை பணமாக மாற்றிய ரூ.3½ லட்சம் மற்றும் ஏற்கனவே தான் வைத்திருந்த ரூ.1½ லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்தை மொபட்டின் பெட்டியில் வைத்து பூட்டினார்.

பின்னர் பஸ்நிலையம் அருகில் சுரண்டை ரோட்டில் உள்ள காய்கறி கடையின் முன்பு மொபட்டை நிறுத்தினார். அப்போது மொபட்டின் சாவியை எடுக்காமல் காய்கறி கடைக்குள் சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்த சங்கர நாராயணன் தனது மொபட்டில் இருந்த சாவி மாயமானதையும், பெட்டியில் இருந்த ரூ.5 லட்சம் திருடு போனதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளையனின் உருவப்படம்

இதுகுறித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையாக, காய்கறி கடையின் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், மோட்டார்சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வந்து சங்கர நாராயணன் மொபட் அருகே நிறுத்தியதும், பின்னர் மொபட் பெட்டியில் இருந்த ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்ததும் தெரியவந்தது. அதில் பதிவான கொள்ளையனின் உருவப்படத்தை போலீசார் வெளியிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story