மணல் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த டிரைவர் மர்ம சாவு


மணல் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த டிரைவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 23 Jun 2018 4:00 AM IST (Updated: 23 Jun 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன்(வயது 31). டிராக்டர் டிரைவர். கடந்த 10–ந் தேதி இவர், தியாகதுருகம்–விருகாவூர் சாலையில் டிராக்டரில் மணல் கடத்தி வந்த போது அவரை தியாகதுருகம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைக்கப்பட்ட முருகன், கடந்த 20–ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பலவேறு இடங்களில் முருகனை தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் பிரிதிவிமங்கலம் மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் முருகன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முருகனின் மனைவி வளர்செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story