மதுரை விமான நிலையத்தில் ரூ.24½ லட்சம் தங்கம் பறிமுதல் ராமநாதபுரம் வாலிபர் கைது
மதுரை விமான நிலையத்தில் நூதனமுறையில் தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.24½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை,
துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹலீம்(வயது 39) என்பவரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நீண்டநேர சோதனைக்கு பின்னர் அவர் வைத்திருந்த பையில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு கூறுகையில், முகமது ஹலீம் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது தங்கக்கட்டிகளை கருப்பு நிற டேப் மூலம் சுற்றி மறைத்தும், கம்பி போன்று தங்கத்தை அலுமினியம் பூசி மறைத்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 795 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 48 ஆயிரம் இருக்கும் என்றார்.