பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஓடும் ஆட்டோவில் இருந்து முதியவரை கீழே தள்ளிவிட்ட கொடூரம்


பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஓடும் ஆட்டோவில் இருந்து முதியவரை கீழே தள்ளிவிட்ட கொடூரம்
x
தினத்தந்தி 1 July 2018 3:06 AM IST (Updated: 1 July 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஓடும் ஆட்டோவில் இருந்து முதியவரை கீழே தள்ளிவிட்ட டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் ஓடும் ஆட்டோவில் முதியவரிடம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளனர்.

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா குவெம்புநகரை சேர்ந்தவர் விஸ்வநாத்(வயது 79). இவருக்கும், இவருடைய உறவினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. அதுதொடர்பான வழக்கு பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக வக்கீலை பார்க்க துமகூருவில் இருந்து விஸ்வநாத் பெங்களூருவுக்கு பஸ்சில் வந்தார். பின்னர் சேஷாத்திரிபுரத்தில் இருந்து மெஜஸ்டிக் அருகே காந்திநகரில் உள்ள வக்கீலின் அலுவலகத்திற்கு ஆட்டோவில் புறப்பட்டார்.

முன்னதாக அந்த ஆட்டோவில் செல்ல முயன்ற விஸ்வநாத்திடம் டிரைவர் ரூ.40 கொடுக்கும்படி கூறினார். ஆனால் மீட்டரில் வரும் பணத்தை தான் தருவேன் என்று டிரைவரிடம் விஸ்வநாத் சொன்னார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. ஆனாலும் அந்த ஆட்டோவில் விஸ்வநாத் ஏறினார்.சேஷாத்திரிபுரத்தில் இருந்து சிறிது தூரத்தில் வரும்போது விஸ்வநாத் தனது சட்டைப் பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து பார்த்து கொண்டிருந்தார். இதனை ஆட்டோ டிரைவர் கவனித்தபடி வந்தார்.

இந்த நிலையில், திடீரென்று விஸ்வநாத் கையில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்ட டிரைவர், ஓடும் ஆட்டோவில் இருந்து அவரை கீழே தள்ளினார். இதில் கை, காலில் பலத்தகாயம் அடைந்த விஸ்வநாத் வலியால் துடித்தார். உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விஸ்வநாத்தை காப்பாற்றினார்கள். அதே நேரத்தில் ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை விரட்டி சென்று, டிரைவரை பிடிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் ஆட்டோவின் பதிவு எண்ணை வாலிபர் எழுதி வைத்து கொண்டதுடன், அதனை சேஷாத்திரிபுரம் போலீசாரிடம் கொடுத்தார்.

மேலும் படுகாயம் அடைந்த விஸ்வநாத் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து சேஷாத்திரிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரான எம்.எஸ்.பாளையாவை சேர்ந்த முகமது ஆயுப்பை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story