கர்நாடகம் மேல் முறையீடு செய்வதால் கவலை இல்லை - எடப்பாடி பழனிசாமி


கர்நாடகம் மேல் முறையீடு செய்வதால் கவலை இல்லை - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 1 July 2018 4:25 AM IST (Updated: 1 July 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வதால் கவலைப்பட தேவை இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

எடப்பாடி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே, முதல் பகுதி சாலை அமைத்துவிட்டநிலையில் தற்போது 2 மற்றும் 3-வது கட்ட புறவழிச்சாலை ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 2 மற்றும் 3-வது கட்ட புறவழிச்சாலையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டதால் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது. இதுபற்றி கவலைப்பட தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் தமிழ்நாடு சார்பில் தொடர்ந்து போராடியதின் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

இந்த ஆணையம் சார்பில் வருகிற 2-ந் தேதி முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்திட கோரிக்கை வைக்கப் படும்.

தற்போது கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை விரைவில் நிரம்பினால் குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப் படாததால், டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் மூலம் நிலத்தடி நீரை கொண்டு குறுவை தொகுப்பு மேற்கொள்ள வழக்கத்தைவிட கூடுதல் நிதி நடப்பாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 3½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. விவசாயிகள் குறுவை சாகுபடியுடன் தானிய பயிர்களையும் பயிரிட்டு பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story