கொட்டாம்பட்டி அருகே உடலில் காயங்களுடன் பெண் பிணம், போலீசார் விசாரணை


கொட்டாம்பட்டி அருகே உடலில் காயங்களுடன் பெண் பிணம், போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 July 2018 3:15 AM IST (Updated: 11 July 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே உடலில் காயங்களுடன் பெண் இறந்து கிடந்தார். அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டியில் இருந்து உதினிப்பட்டி செல்லும் சாலையில், தாதாங்கலம் சாலை ஓரம் உள்ள முட்புதர் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணமாக கிடந்தது. இதுபற்றி கிடைத்த தகவலின்படி கிராம நிர்வாக அலுவலர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்ரவர்த்தி, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் இறந்து கிடந்த பெண் ரோஸ் கலர் சேலையும், கழுத்தில் தாலியும் அணிந்து இருந்தார், மேலும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும், தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய அடையாளமும் இருந்தது. மேலும் கொலை நடந்த இடத்தில் மோட்டார் சைக்கிளின் டயர் தடம் இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள தென்னந்தோப்பு பகுதிக்குள் சென்று திரும்பியது. இதையடுத்து பெண்ணின் உடலை போலீசார் மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பெண் கற்பழித்து, நகைக்காக கடத்தி வந்து கொலை செய்யப்பட்டாரா என்றும், இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார் என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்து கிடந்த பெண் பற்றிய விவரம் அறிய சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story