வருகிற 16-ந் தேதி முதல் மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை


வருகிற 16-ந் தேதி முதல் மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 7:41 PM GMT)

வருகிற 16-ந் தேதி முதல் மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

திருப்பூர்,

பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் வருகிற 16-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை செய்யப்படுவதாக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் தடை அமலுக்கு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலகங்களில் வருகிற 16-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் குழந்தை சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது:- துறை அலுவலகங்கள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் வருகிற 16-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது.

இதற்கு பதிலாக பாக்கு மட்டை, தாமரை இலை, வாழை இலை, கண்ணாடி குவளை, துணிப்பை, சணல்பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். மேலும், பேப்பர் கப்புகள் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை சுகாதார நிலையங்கள், அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடாது.

முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலக கூட்டங்களில் டீ, காபி போன்றவற்றை குடிப்பதற்காக எவர்சில்வர் அல்லது கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்த வேண்டும். இதற்காக அலுவலகங்களில் பாத்திரங்கள் கழுவும் வசதியை மேம்படுத்த வேண்டும். துணிப்பைகள் மற்றும் சணல் பைகளையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story