கோவில் வளாகங்களில் பூஜைப்பொருள் விற்பனை கடை திறக்கும் டெண்டருக்கு தடை


கோவில் வளாகங்களில் பூஜைப்பொருள் விற்பனை கடை திறக்கும் டெண்டருக்கு தடை
x
தினத்தந்தி 21 July 2018 3:30 AM IST (Updated: 21 July 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கோவில் வளாகங்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறப்பதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 2–ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் வளாகங்களிலும் கடைகள் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு முடிவு எடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பின்னர் பக்தர்களின் நலன்கருதி கோவில் வளாகங்களில் பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜைப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்கலாம் என்று கடந்த மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் தாணுமலையான் கோவில் உள்ளிட்ட சில கோவில் வளாகங்களில் கடை வைப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.

அரசின் கொள்கை முடிவின்படி கோவில் வளாகங்களில் கடைகள் திறக்கக்கூடாது என்று இருக்கும் நிலையில் சுசீந்தரம் பகுதியில் கோவில் வளாகங்களில் கடை வைக்க கோரப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுசீந்தரத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் கூறும் கோவில் கடைகள் தொடர்பான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story