பள்ளியை தரம் உயர்த்த தடை கேட்டு தலைமை ஆசிரியரே வழக்கு தொடர முடியாது
பள்ளியை தரம் உயர்த்துவதற்கு தடை கேட்டு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே வழக்கு தொடர முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த கலியாந்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் ரமாமணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு திட்டம் தயாரித்தது. அந்த பட்டியலில் எங்கள் பள்ளியும் உள்ளது. ஆனால் நடுநிலைப்பள்ளிகள் உள்ள இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் பிற உயர்நிலைப்பள்ளிகள் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கலியாந்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலும் தரம் உயர்த்துவதற்கு உரிய தகுதியை எங்கள் பள்ளி பெறவில்லை.
ஆனால் எங்கள் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒத்துழைக்கவில்லை. இதனால் நான் விடுமுறையில் இருந்த நாட்களில் இந்த பணிகள் நடத்தப்பட்டுள்ளன. இது அரசின் சட்ட திட்டங்களை மீறும் செயல். எனவே கலியாந்தூர் அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த ஐகோர்ட்டு, பள்ளியை தரம் உயர்த்த இடைக்கால தடை விதித்தது.
‘இந்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என்று அதே ஊரை சேர்ந்த கரு.மகாலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘எங்கள் ஊர் பள்ளியில் படிக்கும் 75 சதவீத மாணவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த பள்ளியை தரம் உயர்த்துவதற்காக கிராம மக்கள் சார்பில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பள்ளி தரம் உயர்த்தப்பட்டால் இங்குள்ள மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும்‘ என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் அந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஒய்.கிருஷ்ணன் ஆஜராகி, பள்ளியை தரம் உயர்த்த தடை கேட்டு தலைமை ஆசிரியை வழக்கு தொடர அதிகாரம் இல்லை என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், “பள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரிகளுக்கு தான் அதிகாரம் உள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியரே வழக்கு தொடர முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.