காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு


காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 July 2018 5:15 AM IST (Updated: 21 July 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

‘காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான்’ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

கோவை,

கோவை குறிச்சி குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை கோவை மாநகராட்சி சார்பில் நேற்று அகற்றப்பட்டது. இந்த பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வருமான வரித்துறை சோதனை பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. இதுதொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். ஊழலுக்காக தமிழ்நாட்டில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. தான். மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் சரி. தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். காவிரி பிரச்சினையில் முதலில் மத்திய அரசு கர்நாடக தேர்தலுக்காக தாமதப்படுத்தியது. ஆனாலும் அதன் பின்னர் காவிரி ஆணையத்தை அமைத்து விட்டனர். மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு எந்த துரோகத்தையும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்சினையில் காங்கிரசும், தி.மு.க.வும் தான் தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளன.

கோவை மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள் கேட்கப்பட்டதோ அந்த திட்டங்களை எல்லாம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 3 ஆண்டுகளில் செய்துள்ளோம். இன்று எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சிலர் எதிர்க்கிறார்கள். கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்து சிலர் தவறான தகவல் பரப்புகிறார்கள். அதேபோல் தான் உக்கடம்–ஆத்துப்பாலம் மேம்பாலம் குறித்தும், காந்திபுரம் மேம்பாலம் பற்றியும் தவறான தகவலை வாட்ஸ்–அப்பில் பரப்புகிறார்கள். காந்திபுரம் பாலத்தில் இருந்து கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலையில் இறங்குவதற்கு வழிவகை செய்யப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிச்சி குளத்தில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட உள்ளது. அரசு செய்யும் நல்ல திட்டங்களை சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் தாங்கள் செய்ததாக விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்.

தி.மு.க. மட்டுமல்ல யார் தடுத்தாலும் மெட்ரோ ரெயில் திட்டம், அவினாசி ரோடு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் போது மேலும் பல ஐ.டி. நிறுவனங்கள் கோவைக்கு வரும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். கோவை மாவட்டத்தில் மேலும் 8 தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி உதவி அளிப்பதாக முதல்–அமைச்சர் கூறியுள்ளார். நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், நொய்யலை சுத்தப்படுத்தவும் ஏற்கனவே முதல்–அமைச்சர் ஒரு திட்டம் அறிவித்தார். அந்த நிதியில் ஒரு பகுதி கோவை மாவட்டத்தில் நொய்யலை சுத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் மற்றும் எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ., துணை ஆணையாளர் காந்திமதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story