விபத்தில் தனது கால் இழந்ததற்கு காரணம் என கருதி பெயிண்டரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி கைது


விபத்தில் தனது கால் இழந்ததற்கு காரணம் என கருதி பெயிண்டரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி கைது
x
தினத்தந்தி 22 July 2018 4:45 AM IST (Updated: 21 July 2018 10:25 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் தனது கால் இழந்ததற்கு காரணம் என கருதி இரும்பு கம்பியால் பெயிண்டரை அடித்து கொன்ற மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மானோஜியப்பா வீதி பட்கோசாமி வட்டாரத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 39). பெயிண்டர். இவரும், தஞ்சை முனிசிபல் காலனி கனகசபை நகர் 1–ம் தெருவை சேர்ந்த சசிகுமாரும்(44) நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். கடந்த 2010–ம் ஆண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் சசிகுமாருக்கு வலது கால் துண்டிக்கப்பட்டது.

விபத்து நடந்தவுடன் சசிகுமாரை மீட்டு சிகிச்சையில் சேர்க்காமல் சங்கர் அங்கிருந்து சென்று விட்டார். மேலும் சசிகுமார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட அவரை சங்கர் பார்க்கவில்லை. இதனால் திட்டமிட்டு அழைத்து சென்று தன்னை விபத்தில் சிக்க வைத்துவிட்டதாக சங்கர் மீது சசிகுமாருக்கு கோபம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருடன் பழகுவதை சசிகுமார் நிறுத்தி விட்டார்.

வலது கால் துண்டிக்கப்பட்டதால் சசிகுமார் எங்கு சென்றாலும் ஆட்டோவில் தான் சென்று வந்தார். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் சசிகுமாரும், சங்கரும் பழைய பஸ் நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். உடனே இருவரும் ஆட்டோவில் ஏறி டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு மது அருந்திவிட்டு வீட்டில் வைத்து குடிப்பதற்காக மதுப்பாட்டில்களை வாங்கி கொண்டு ஆட்டோவில் புறப்பட்டு சசிகுமார் வீட்டிற்கு வந்தனர்.

அங்கிருந்த சசிகுமாரின் தாயார், தனக்கு தலை வலிப்பதாக கூறிவிட்டு மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்க சென்றுவிட்டார். இரவு நேரத்தில் நண்பர்கள் இருவரும் வீட்டில் அமர்ந்து மது அருந்தினர். போதை அதிகமானதால் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கி காலை இழந்த என்னை ஏன் வந்து பார்க்கவில்லை. அந்த விபத்துக்கு நீ தான் காரணம் என சங்கரை பார்த்து சசிகுமார் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த சசிகுமார், வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சங்கரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போதையில் இருந்த சசிகுமார், சங்கரின் உடலை தர, தரவென இழுத்து வந்து வீட்டிற்கு வெளியே போட்டு விட்டு தூங்க சென்று விட்டார்.

நேற்று காலையில் சசிகுமார் வீட்டின் முன்பு சங்கர் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இந்த தகவல் பரவியதால் கூட்டம் அதிகமானது. இந்த நிலையில் தூங்கிக் கொண்டு இருந்த சசிகுமார் எழுந்து வெளியே வந்து பார்த்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு ஆட்டோவை பிடித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.

தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ஜெயச்சந்திரன், மருத்துவகல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாற்றுதிறனாளி சசிகுமாரை கைது செய்தனர்.


Next Story