திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் போலீசில் சிக்கினார்


திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 22 July 2018 5:30 AM IST (Updated: 22 July 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தன்னுடன் அன்பாக பேசாமல் வேறு வாலிபருடன் பேசி பழகியதால் தீர்த்துக் கட்டியதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்துள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஜெனித்தா(2) என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் புஷ்பா கர்ப்பமாக இருந்துள்ளார். ராமதாஸ் மும்பையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, புஷ்பாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ராமதாஸ், அவருடன் அடிக்கடி தகராறு செய்துவந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில், புஷ்பா கணவருடன் கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து கடந்த 14-ந்தேதி ராமதாஸ் தனது மனைவியுடன் சமாதானம் பேசி, தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து மறுநாள்(15-ந்தேதி) அங்குள்ள பம்புசெட்டுக்கு துணி துவைக்க சென்ற புஷ்பா அங்குள்ள கரும்பு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அப்போது புஷ்பா அணிந்திருந்த 4½ பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

தொடர்ந்து கொலையாளியை பிடிக்கும் வகையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கள்ளக்குறிச்சி வீமராஜ், திருக்கோவிலூர் முத்து மாணிக்கம், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

புஷ்பா அணிந்திருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததால், அவரை நகைக்காக தான் மர்ம மனிதர்கள் கொலை செய்து இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் தனிப்படை போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே, ராமதாசின் செயல்பாடுகளை கண்காணித்து வந்த போலீசாருக்கு, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ராமதாசை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், புஷ்பாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் புஷ்பாவை திட்டம் போட்டு, அவர் கொலை செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதாவது, கொலை செய்து விட்டு போலீசில் சிக்காமல் இருக்க எப்படி எல்லாம் செயல்பட வேண்டும் என்பது தொடர்பான வீடியோவை செல்போனில் பதிவிறக்கம் செய்து அதை பார்த்து வந்துள்ளார்.

இதன் மூலமாக திட்டம் போட்டு, புஷ்பாவை கரும்பு தோட்டத்தில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த ராமதாஸ், போலீசாரின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், போலீசார் கடந்த 5 நாட்களாக கொலையாளி யார் என்பது குறித்து தீவிரமாக தேடி வந்த நிலையில், ராமதாஸ் தனக்கு எதுவும் தெரியாதது போன்றே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் சந்தேகத்தின் பேரில் ராமதாசை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமதாசை போலீசார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட ராமதாஸ் கொலைக்கான காரணம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும் புஷ்பாவுக்கும் இடையே திருமணம் ஆன நாள் முதல் சுமூகமான உறவு என்பது இல்லை. அவர் என்மீது பாசமாகவே இருந்தது கிடையாது. இந்த நிலையில் திருமணத்துக்கு முன்பே நான் மும்பையில் தங்கியிருந்து வேலை பார்த்த போது, எனக்கு ஜெனித்தா என்கிற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.

ஆனால் நான் புஷ்பாவை திருமணம் செய்து கொண்டதால், எங்களுக்கு பிறந்த குழந்தைக்கு எனது காதலியின் பெயரையே வைத்தேன். இது நாளடைவில், புஷ்பாவுக்கு தெரிவிந்து விட்டது. இதனால் அவர் என்னுடன் சண்டை போட்டுவிட்டு, விளந்தையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதன் பின்னர், புஷ்பா அய்யப்பன் நகரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அங்கு வேலை பார்த்த ஒரு வாலிபருடன் அவர் பேசி பழகினர். இதனால் புஷ்பா மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது செல்போனில் தானாக அழைப்புகளை பதிவு செய்யும் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து அதன் மூலமாக அவரை கண்காணித்து வந்தேன்.

ஒரு கட்டத்தில், புஷ்பாவிடம் சென்று அந்த வாலிபருடன் பேசி வருவது குறித்து கேட்டேன். அப்போது நீயே ஒரு பெண்ணுடன் பழக்கத்தில் இருக்கிறாய் என்னிடம் வந்து கேட்கிறாயா என்று கேட்டார். இதனால் புஷ்பா மீது எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. என்னுடன் அன்பாக பேசி பழகாத புஷ்பாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். அதன்படி தந்தை வீட்டில் இருந்த புஷ்பாவிடம் சமாதானம் பேசி என்னுடன் அழைத்து வந்தேன்.

இதன்பின்னர், கொலை செய்வது தொடர்பான வீடியோவை செல்போனில் பார்த்தேன். அந்த வகையில் அவர் பம்பு செட்டுக்கு குளிக்க சென்ற போது, தலையை பிடித்து தண்ணீரில் மூழ்க செய்தேன். அதில் அவர் மூச்சு திணறிய நிலையில், அங்கு கிடந்த சேற்றை அள்ளி புஷ்பாவின் மூக்கிலும், வாயிலும் பூசினேன்.

இதில் மண் உள்ளே சென்று, துடிதுடித்து அங்கேயே இறந்தார். பின்னர் கொலையில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து சட்ட நுணுக்கங்களையும் இணையதளத்தில் பார்த்து வந்தேன். இந்த நிலையில் போலீசார் என்னை எப்படியோ கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து ராமதாசிடம் இருந்து செல்போன் மற்றும் நகையை பறிமுதல் செய்தனர். கணவரே மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story