போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் சாவு, உறவினர்கள் சாலை மறியல்


போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் சாவு, உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Aug 2018 4:30 AM IST (Updated: 4 Aug 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு வழக்கில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட வாலிபர் இறந்துபோனதை தொடர்ந்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் ஆஸ்பத்திரி 1–வது தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் மணிகண்டன்(வயது 27). இவரை நேற்று முன்தினம் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக முதுகுளத்தூர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் முதுகுளத்தூர் ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி விட்டு ஒரு பையில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த கடைக்கு சென்று பணத்தை கைப்பற்றினர். மேலும் நகைகள் குறித்து விசாரித்த போது போலீசாரை அங்கும், இங்கும் அழைத்து சென்று அலைக்கழித்தாராம். இதனால் அவரை தேரிருவேலி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை வாலிபர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். இதனால் போலீசார் தண்ணீர் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி குடித்த மணிகண்டனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே போலீசார் அவரை தேரிருவேலி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி அவர் பரமக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்துபோனார். அவரது உடல் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். பின்பு அவர்கள் முதுகுளத்தூர்–பரமக்குடி சாலையில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரம் நடைபெற்ற இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இறந்த வாலிபர் மணிகண்டன் மீது ஏற்கனவே முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு மதுரை தல்லாகுளத்தில் 11 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறைக்கு சென்ற மணிகண்டன் தற்போது ஜாமீனில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story