திருவட்டார் அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன கருவியை பொருத்தி கொள்ளை முயற்சி


திருவட்டார் அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன கருவியை பொருத்தி கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 11 Aug 2018 4:50 AM IST (Updated: 11 Aug 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன கருவியை பொருத்தி கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

திருவட்டார்,

திருவட்டார் அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன கருவி பொருத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அங்கு ரகசிய எண்ணை பதிவு செய்ய வைத்திருந்த மெமரி கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள சுவாமியார்மடம் சந்திப்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அதே வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக நேற்று மதியம் ஊழியர்கள் சென்றனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில், அந்த எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டு செலுத்தும் பகுதியில் ஒரு நவீன கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதோடு ரகசிய எண்ணை அழுத்தும் பகுதியில் ஒரு மைக்ரோ கேமராவும், ஒரு மெமரி கார்டும் இணைக்கப்பட்டு இருந்தன. அதாவது நவீன கருவியை பயன்படுத்தி ரகசிய எண்ணை திருடி யாரோ மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி வங்கி மேலாளர் ஜெயஸ்ரீ என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் திருவட்டார் போலீசுக்கும் தகவல் கூறப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த நவீன கருவி, மைக்ரோ கேமரா மற்றும் மெமரி கார்டை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது ரகசிய எண்ணை பதிவிடும்போது, அதை மைக்ரோ கேமரா படம் பிடித்து மெமரி கார்டில் பதிவு செய்துவிடும். ரகசிய எண்ணை தெரிந்து கொண்டதும் போலியாக ஏ.டி.எம். கார்டு அச்சிட்டு நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்க மர்ம ஆசாமிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் ஆசாமிகளின் சதிவேலை போலீசாருக்கு தெரியவந்துவிட்டது.

ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற ஆசாமிகள் விவரம் தெரியவில்லை. எனவே ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் மர்ம ஆசாமிகள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story