இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத்தரகோரி அதிகாரியிடம் மனு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 27 மீனவர்களை உடனடியாக மீட்டுத்தரக்கோரி மீனவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
தமிழ்நாடு மீன்பிடிதொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான மீனவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மீன்துறை உதவி இயக்குனர் அப்துல்லாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– நமது நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கையின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். நாட்டுப்படகு மீனவர்களின் இந்த மீன்பிடிப்பிற்கு இலங்கை மீனவர்கள் எந்த ஆட்சேபனையும் இதுவரை தெரிவித்ததில்லை.
விசைப்படகு மீனவர்களின் மீன்பிடிப்பு முறையால்தான் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9–ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் செண்பகமகாதேவிபட்டிணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 3 மீன்பிடி வல்லங்கள், அதில் சென்ற 22 மீனவர்களையும் வழக்கமான பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுவிட்டது. இதேபோல, நாகை மாவட்டம் வாணகரம் பகுதியை சேர்ந்த ஒரு மீன்பிடி வல்லத்தில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுவிட்டது.
இது இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடவடிக்கையாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, 27 மீனவர்களையும், 4 மீன்பிடி வள்ளங்களையும் மீட்டுத்தர வேண்டும். இதுதவிர, கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட 2 மீன்பிடி வள்ளங்களும், இதுவரை மீட்கப்படாமல் உள்ளதால் அதனை உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நடவடிக்கைகள் தொடராமல் தடுப்பதோடு, பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் அச்சமின்றி மீன்பிடிக்க வழிவகை செய்துகொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மீன்துறை அதிகாரி இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.