கோவையில் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கலெக்டரிடம் விவசாயிகள் மனு


கோவையில் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 14 Aug 2018 4:30 AM IST (Updated: 14 Aug 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியை போன்று கோவையிலும் யானைகள் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் நடைபாதை வசதி, பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையில் செயலாளர் திருஞானசம்பந்தம் உள்பட ஏராளமான விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், மருதமலை, தொண்டாமுத்தூர், வெள்ளிங்கிரி மலையடிவாரம், மதுக்கரை, போளுவாம்பட்டி, நரசீபுரம், ஆழியாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து சொகுசு விடுதிகள், ஆன்மிக தலங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

வழித்தடங்கள் மறிக்கப்படுவதால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள்ளும், விவசாய நிலங்களிலும் புகுந்து விடுகின்றன. இதனால் பயிர்கள் சேதமடைவதுடன், அவ்வப்போது பொதுமக்களும் காட்டு யானை தாக்கி உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு போதிய அளவு தண்ணீர் வருவது இல்லை. எனவே கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன் தலைமையில் அளித்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

ஜீவா நகரில் 203 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் குடிசை வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் ஓட்டு வீடுகள் கட்டி தரப்பட்டது. தற்போது அங்கிருந்து காலி செய்யும்படி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எங்களுக்கு மாற்று இடம் இலவசமாக வழங்கிய பின்னர், வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டு உள்ளனர். நாங்கள் கடந்த 1978–ம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். நாங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க வில்லை. எனவே இதே இடத்தில் எங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களை இங்கிருந்து காலி செய்யும் முடிவை அதிகாரிகள் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் சுசி.கலையரசன் அளித்த மனுவில், பொதுமக்களுக்கு தற்போது புதிய ரே‌ஷன்கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே ரே‌ஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய ரே‌ஷன் கார்டு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story