என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலையில் மேலும் 2 பேர் கைது


என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலையில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2018 5:30 AM IST (Updated: 19 Aug 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

புதுவை என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை சின்னையாபுரம் ஆர்.கே.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 38). என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இவர் கடந்த 14–ந்தேதி தனது குழந்தைகளை டியூசனுக்கு அழைத்து செல்லும்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் முன்விரோதம் மற்றும் அரசியலில் அவரது வளர்ச்சியை பிடிக்காமல் கோட்டக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற அல்லாகுண்டு மணி, சின்னையாபுரம் பிரபு என்ற பிரபு நாராயணன், குருசுக்குப்பம் விக்கி என்ற விக்கிராய், முத்தியால்பேட்டை மணி என்ற பொக்கமணி மற்றும் சிலர் சேர்ந்து இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், மோகன்கமார், கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், அதிரடிப்படை ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக பிரபு, தமிழரசன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் மணிகண்டன் என்ற அல்லாக்குண்டு மணிகண்டன், விக்கி என்ற விக்கிராய் ஆகியோர் சேதராப்பட்டு முத்தமிழ் நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வீச்சரிவாள், மோட்டார்சைக்கிள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா பாராட்டினார்.


Next Story