துப்பாக்கி, கத்தியுடன் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள்


துப்பாக்கி, கத்தியுடன் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:36 AM IST (Updated: 24 Aug 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி, கத்தியுடன் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நாக்பூர்,

நாக்பூர், சாக்கர்தாரா போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட சோட்டா தாஜ்பாக் பகுதியில் சாக்காரி வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் குறைவாகவே காணப்படும். இந்த நிலையில் நேற்று மதியம் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வங்கிக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

துப்பாக்கி முனையில் அதிகாரிகளை மிரட்டி பணத்தை எடுத்து தருமாறு மிரட்டல் விடுத்தனர். அதிகாரிகள், வங்கியில் பணம் ஏதும் இல்லை என்று அவர்களிடம் தெரிவித்தனர். இருப்பினும் அவர்களின் பேச்சை நம்பாத கொள்ளையர்கள் வங்கியில் இருந்த பெட்டிகளில் பணத்தை தேடினர். ஆனால் பணம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்திற்குள்ளான கொள்ளையர்கள், ஆத்திரத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கடுமையாக தாக்கினர்.

பின்னர் வங்கியின் இரும்பு ஷட்டரை இழுத்து மூடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வங்கிக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story