மதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும்: மாநகராட்சி கமிஷனரிடம், அழகிரி சார்பில் மனு
மதுரையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி சார்பில் அவருடைய ஆதரவாளர்கள் மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
மதுரை,
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி சார்பாக பி.எம்.மன்னன், இசக்கிமுத்து, எம்.எல்.ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா ஆகியோர் மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழக முதல்–அமைச்சராக 5 முறை பொறுப்பேற்றவரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டுள்ள மக்களின் மேன்மைக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், தமிழர்களின் அன்பை பெற்றவருமான கருணாநிதி, இயற்கை எய்தியதை தாங்கி கொள்ள முடியாமல் தொண்டர்களும், பொதுமக்களும் இன்றும் கண்ணீர் வடிக்கின்றனர்.
இத்தகைய சிறப்புமிகுந்த கருணாநிதிக்கு, நான் 35 ஆண்டுகளாக வாழும் மதுரை மாநகரில், மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவை மதுரை கலெக்டர் நடராஜனை சந்தித்து கொடுக்க சென்றனர். ஆனால் கலெக்டர் இல்லாததால் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை கொடுத்தனர்.