ஆரணி: ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் அகற்றாவிடில் போலீசார் மூலம் நடவடிக்கை - துணை சூப்பிரண்டு எச்சரிக்கை


ஆரணி: ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் அகற்றாவிடில் போலீசார் மூலம் நடவடிக்கை - துணை சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Sep 2018 11:15 PM GMT (Updated: 2018-09-08T02:40:38+05:30)

ஆரணி நகர சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகளை வியாபாரிகள் அவர்களாக அகற்றாவிடில் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

ஆரணி,

ஆரணி நகரின் சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சம்பந்தமாக கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி வளாகத்தில் அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி அலுவலக மேலாளர் நெடுமாறன், நகரமைப்பு ஆய்வாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு இ.செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், “ஆரணி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் வண்ணம் சாலையின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது தடுப்பு கம்பிகளை மீறி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

நடைபாதை பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் செய்யக்கூடாது. புதிய, பழைய பஸ் நிலைய பகுதிகளிலும், காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதிகளில் நடைபாதைகளில் வியாபாரம் செய்யக்கூடாது. நகரில் லாரிகளில் இருந்து பொருட்களை இறக்குவதற்கு காலை 10 மணி முதல் 3 மணிவரை வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பு செய்துள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ளுங்கள். தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு, அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.குமார், மாவட்ட பொருளாளர் முருகானந்தம், தொழில் வர்த்தக சங்க தலைவர் சர்மா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் நாராயணன், நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் செந்தில்நாதன், துணைத்தலைவர் செல்வராஜ், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சாதிக்பாஷா, பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார், சிறு, குறு, பெரு வியாபாரிகள் அமைப்பின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story