காட்டுயானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்


காட்டுயானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Sept 2018 3:45 AM IST (Updated: 10 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

காட்டுயானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா வலியுறுத்தி உள்ளார்.

ஊட்டி,

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உணவு பொருட்கள், துணிகள், மருந்துகள் நேரடியாக அங்கு சென்று கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் 14 சதவீதம் வாகன வாடகை உயர்வு ஏற்பட்டு உள்ளதுடன், அத்தியாவசிய உணவு பொருட்களான பருப்பு, காய்கறிகள் போன்றவற்றின் விலை அதிகரித்து உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் முழுஅடைப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கலந்துகொள்ளும் என்று தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால் அடிக்கடி மழை மற்றும் பனியால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பயிர் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும். கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் தினமும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை இடித்து அட்டகாசம் செய்வதும், விளைநிலங்களை நாசம் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண தொகையாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கரடிகள் குட்டியுடன் ஊருக்குள் புகுந்தும், காட்டெருமைகள் நகர்ப்பகுதிகளுக்குள் நுழைந்தும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். எனவே கரடி, காட்டெருமை ஊருக்குள் வராத வகையில் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சரை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உள்ளதால், தமிழக அரசு தனது நம்பிக்கை தன்மையை நிரூபிக்கும் வகையில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில செயலாளர் சரத் கோபால் உடனிருந்தார்.


Next Story