அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2018 10:30 PM GMT (Updated: 10 Sep 2018 5:40 PM GMT)

அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திருவாரூர் மாவட்டம் ஆதனூர் மண்டபத்தை சேர்ந்த வித்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளராக இருந்த ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எனது கணவர் கட்டைபிரபு கைது செய்யப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணைக்காக அவரை கோர்ட்டுக்கு கொண்டு செல்லும்போது என்கவுன்டரில் கொல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எனது கணவரை கீழ்கோர்ட்டுகளில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் செல்லும்போது, அவரது வக்கீல் அல்லது சட்ட உதவி ஆணையம் மூலம் வக்கீலை நியமித்து உடன் செல்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேபோல இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சீர்காழிபார்த்திபனின் மனைவி பாரதியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடக்கும் கோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் வசதி இருந்தால் அதன் மூலம் விசாரிக்கலாம். நேரடியாக ஆஜர்படுத்தும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கலாம் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story