எண்ணூர்– தூத்துக்குடி இடையே பெட்ரோலிய குழாய் பதிக்க நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை
எண்ணூர்– தூத்துக்குடி இடையே பெட்ரோலிய குழாய் பதிக்க நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவன செயலாளர் ரவீந்திரநாத்ரெட்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எங்கள் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தனியார் சரக்கு முனையம் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சில்கான்பட்டி பகுதியில் சரக்கு முனையம் அமைக்க எங்களின் சொந்த நிலத்தில் முதற்கட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை பெட்ரோலியம் மற்றும் கனிமங்களை குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் குறித்து கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி எண்ணூரில் இருந்து திருவள்ளூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு பெட்ரோலிய குழாய்கள் பதிக்க நிலங்கள் கையகப்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் உள்ள எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தையும் கையகப்படுத்த உள்ளனர். இதுபற்றி எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் தெரிவிக்கவில்லை. எனவே பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜே.நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர், பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.