டாக்டரின் மனு தள்ளுபடி: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்


டாக்டரின் மனு தள்ளுபடி: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Sept 2018 3:45 AM IST (Updated: 18 Sept 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும், வழக்கை ரத்து செய்யக்கோரிய டாக்டரின் மனுவை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம். இவர் கான்வென்ட்டில் உள்ள ஒரு கன்னியாஸ்திரியை சில ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்துள்ளார். இதில், அவர் கர்ப்பம் தரித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் வைத்து கருவை கலைத்து உள்ளனர். பின்னர் பலாத்கார போட்டோக்களை வைத்து மிரட்டி கன்னியாஸ்திரியையை பலமுறை அந்த பாதிரியார் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாதிரியார் ராஜரத்தினம், கருவை கலைத்ததாக டாக்டர் சுசித்ரா உள்ளிட்ட 3 பேர் மீது திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் திருச்சி மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் டாக்டர் சுசித்ரா, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் அவர் தனது மனுவில், ‘மருத்துவ சட்டப்படி 45 நாள் கர்ப்பமான கருவை கலைக்கலாம். திருமணம் ஆகாத ஒருவருக்கு பலாத்காரத்தால் ஏற்பட்ட கருவை அவர்களின் சம்மதத்துடன் கலைப்பது குற்றம் ஆகாது. இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

கேரளாவைச் சேர்ந்த பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் என்பவர் ஒரு கன்னியாஸ்திரியை 13 முறை பலாத்காரம் செய்ததாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வருகிறது. மத அடையாளங்களுடன் இருப்பவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவது புதிதல்ல. புத்தமத துறவிகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவதாக தலாய்லாமா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரர் தகவலில் முரண்பாடு உள்ளது. பின்னணி சம்பவம் குறித்து இவருக்கு தெரியவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது. இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம். இதுபோன்ற வழக்கை ரத்து செய்வது என்பது மிகவும் அரிதானது. வழக்கை முழுமையாக விசாரித்தால் தான் முழு விவரம் தெரியவரும்.

எனவே, வழக்கின் விசாரணைக்கான நடைமுறையை ரத்து செய்ய முடியாது. திருச்சி மகளிர் கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். மனுதாரர் பணியில் உள்ள டாக்டர் என்பதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விசாரணைக்கு தேவைப்படும் விவரங்களை மனுதாரர் தெரிவிக்க வேண்டும். அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரும் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.


Next Story