பிளஸ்-2 மாணவரை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு - நீதிபதி உத்தரவு


பிளஸ்-2 மாணவரை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு -  நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 18 Sept 2018 4:00 AM IST (Updated: 18 Sept 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவரை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை,

திருமணம் செய்து கொள்வதற்கு நமது நாட்டின் சட்டப்படி பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். திருமண வயதை அடையாத நிலையில் நடத்தப்படும் குழந்தை திருமணங்கள் தண்டனைக்குரிய குற்றமாக நமது நாட்டில் கருதப்படுகிறது.

குழந்தை திருமணங்களில் பெரும்பாலும் ஆண்கள் மேஜராகவும், பெண்கள் மைனராகவும் இருப்பார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் அப்படியே மாற்றாக சம்பந்தப்பட்ட பெண் மேஜராகவும், ஆண் மைனராகவும் உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தனர்.

அதன்பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி உடனடியாக மனு மீது விசாரணை நடத்தினார்.

மேலும் கெங்கலமகாதேவி கிராமத்திற்கு நேரில் சென்று மனுதாரரின் மகளையும், அந்த வாலிபரையும் அழைத்து வர கடலாடி போலீசாருக்கு முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை மட்டும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்தனர். அந்த இளம்பெண்ணிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் இளம்பெண் மேஜர் என்பதும், அந்த வாலிபர் பிளஸ்-2 படிக்கும் மைனர் (17 வயது) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. இதனை கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பிளஸ்-2 மாணவரான மைனரை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் என்ற பெயரில் குடும்பம் நடத்தியதால் அந்த இளம்பெண் மீதும், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததால் மைனர் வாலிபர் மீதும் வழக்குப்பதிவு செய்ய கடலாடி போலீசாருக்கு முதன்மை மாவட்ட நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

அப்போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜ்மோகன் உடனிருந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மைனர் பெண் குழந்தைகளை திருமணம் செய்வது அதிகளவில் இருந்து வரும் நிலையில் முதல்முறையாக மைனர் வாலிபரை மேஜர் ஆன பெண்ணை திருமணம் செய்து கொண்டது நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story