பாலியல் புகார் கொடுத்த பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு இழப்பீடு: மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை
பாலியல் புகார் கொடுத்த பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு, சப்–இன்ஸ்பெக்டர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
மதுரை,
சிவகங்கை மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மானாமதுரையைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
சிவகங்கை மாவட்ட சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவில் தலைமை போலீஸ்காரராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். தற்போது சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக உள்ளேன். 2009–ம் ஆண்டு நான் பாலியல் தொல்லை தந்ததாக மானாமதுரையில் பணியாற்றிய சப்–இன்ஸ்பெக்டர் நர்மதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அந்த புகார் குறித்து சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனித உரிமைகள் ஆணையத்தில் நர்மதா குற்றச்சாட்டு வைத்தார்.
அதன்பேரில் என் மீதும், போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மீதும் கூறப்பட்ட புகார் நிரூபிக்கப்பட்டதாக கூறி, நர்மதாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை அரசு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
அந்த தொகையில் ரூ.3 லட்சத்தை என்னுடைய சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவும், மீதமுள்ள ரூ.2 லட்சத்தை ராஜசேகரனிடம் இருந்து வசூலித்துக்கொள்ளவும், என்னை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க மட்டுமே மனித உரிமை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே என்னிடம் இழப்பீட்டு தொகையை வசூலிக்கவும், என்னை பணி நீக்கம் செய்யவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதம். எனவே இந்த விஷயத்தில் மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து தமிழக உள்துறை முதன்மை செயலாளருக்கும், மாநில மனித உரிமை ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.