முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் வந்தார் - உற்சாக வரவேற்பு


முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் வந்தார் -  உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 21 Sep 2018 11:00 PM GMT (Updated: 21 Sep 2018 11:00 PM GMT)

நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நாகர்கோவில் வந்தார். அவருக்கு குமரி மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு குமரி மாவட்டம் வந்தார்.

அவர், சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஆரல்வாய்மொழிக்கு 6.40 மணிக்கு வந்தடைந்தார். குமரி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே சந்தித்து புத்தகம் கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதோடு குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜாண்தங்கம் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றபடியே அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கை அசைத்தார். அப்போது அ.தி.மு.க.வினர் மலர்களை தூவி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். அவருக்கு கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தோவாளையில் மீண்டும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், தோவாளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பிறகு தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கும் அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. வண்ண வண்ண வெடிகள் வானில் வெடித்து சிதறின. இதனை எடப்பாடி பழனிசாமி அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகை மாடியில் அமர்ந்தபடி பார்த்து ரசித்தார். அப்போது அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன் எம்.பி., தளவாய் சுந்தரம், எஸ்.ஏ.அசோகன், ஜாண்தங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சேவியர் மனோகரன், டாக்டர் சி.என்.ராஜதுரை, ஜெயசீலன், ஜெயச்சந்திரன், கிருஷ்ணன், ஈ.என்.சங்கர், ஆர்.ஜே.கே.திலக், டாரதிசாம்சன், லாயம் ஷேக், தர்மர், வக்கீல் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story