ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; 2 பேர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 3:45 AM IST (Updated: 23 Sept 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ளது கொத்தகொண்டப்பள்ளி. இங்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிய கூடிய தொழிலாளர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

அதே போல அருகில் உள்ள கொத்தகொண்டப்பள்ளி, நஞ்சாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்களும் அந்த ஏ.டி.எம். மையத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார்கள்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெம்பட்டியை சேர்ந்த மதுராஜ் (வயது 29), மாரேகவுடு (29) என்பதும், தனியார் நிறுவனத்தில் வெல்டிங் தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் ஏ.டி.எம்.-ல் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பணம் தப்பியது.

Next Story