கோவையில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோர்; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி போலி மது தாராளம்


கோவையில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோர்; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி போலி மது தாராளம்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:30 AM IST (Updated: 23 Sept 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 24 மணி நேரமும் போலி மது விற்பனை செய்யப்படுகிறது.

கோவை,

மது நாட்டுக்கும், வீட்டிற்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகத்தை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களில் எழுதி இருப்பதை பார்க்க முடியும். மது குடித்தால் நாளடைவில் மரணம் நிச்சயம் என்பதை உணராதவர்கள் இல்லை.ஆனால் தாராளமாக கிடைக்கும் மதுவுக்கு இரையாகும் கூட்டம் அதிகரித்துகொண்டே இருக்கிறது. எதுவும் கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தால் அதை நாடி செல்லும் கூட்டம் குறைந்து போகும்.வீடுதேடி வந்தால் அதை பிடிக்க கரங்கள் நீளத்தான் செய்யும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) என்ற அரசு நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லரை வர்த்தகம் செய்ய உரிமம் பெற்று உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 266 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளை எளிதாக நிர்வகிக்கும் வகையில் கோவை வடக்கு, கோவை தெற்கு என்று 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இதில் கோவை வடக்கு பகுதியில் 153 மதுக்கடைகளும், கோவை தெற்கு பகுதிகளில் 113 மதுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளின் அருகே தனியார் சார்பில் பார்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ரம், ஜின், பீர், பிராந்தி, விஸ்கி, ஒயின் போன்ற மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தினமும் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி உண்டு.

இந்த மதுக்கடைகளின் அருகே உள்ள தனியார் பார்களும், இந்த நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும். அத்துடன் பார்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது. மது குடிக்க வருபவர்களுக்கு தின்பண்டங்கள், தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் தம்ளர்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி உண்டு.

ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதன் அருகே உள்ள பார்களில் 24 மணி நேரமும் தாராளமாக மதுபானங்கள் கிடைக்கிறது. இரவு 12 மணிக்கு மேல் சென்று மது வாங்கினால் அந்த மது விலையில் இருந்து ரூ.100 வரை கூடுதல் விலைக்கும், அதிகாலை 5 மணிக்கு சென்று மது வாங்கினால் அதன் விலையில் இருந்து ரூ.50 அதிகமாகவும் விற்கப்படுகிறது. ஆக மதுபிரியர்களால் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை களைகட்டுகிறது.

இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் (பெரும் பாலானோர் பெண்கள்) கூறியதாவது:-

மதுக்கடைகளும், பார்களும் அருகருகே இருப்பதால், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மற்றும் பார்களின் உரிமையாளர்கள் கூட்டுச்சேர்ந்து அனுமதிக்கப்படாத நேரத்தில் படுஜோராக மதுபானங்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதை தட்டிக்கேட்கும் அதிகாரம் படைத்த போலீசாருக்கு தவறாமல் பணம் சென்று விடுவதால் அவர்கள் அதை கண்டுகொள்வது இல்லை.

மேலும் எப்போதாவது ஆங்காங்கே மது விற்றதாக கூறி சிலரை பெயரளவுக்கு கைது செய்கிறார்கள். அவர்களும் உடனடியாக விடுவிக்கப் படுவதால், திரும்பவும் அவர்கள் சென்று மதுபானங்களை விற்பனை செய்துதான் வருகிறார்கள். இதன் காரணமாக பெட்டிக்கடைகளில் கூட மதுபானங்கள் தாராளமாக கிடைத்து வருகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக மதுபானங்களை குடித்து விட்டு, ஆடைகள் விலகியது கூட தெரியாமல் ரோட்டில் கிடப்பவர்களை பார்க்க முடிகிறது.

அதிகமாக மது விற்று பணத்தை அள்ளவேண்டும் என்ற குறியீட்டுடன் மக்கள் குடியிருப்புகளுக்குள் மதுபான கடைகள் வந்துவிட்டன. குறிப்பாக பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகில்தான் அதிகமாக டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.

தெருவுக்கு தெரு மதுபானங்கள் தாராளமாக கிடைக்கிறது. ஏதோ முறுக்கு விற்பனை செய்வதுபோன்று மதுபானங்களை பெட்டிக்கடைகளில் வைத்து விற்கிறார்கள். சிலர் எப்போதாவது ஒருநாள் மட்டுமே மது அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அருகிலேயே மதுபானங்கள் தாராளமாக கிடைத்து வருவதால், அவர்களும் முழு குடிகாரர்களாகி மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

மேலும் குடியிருப்பு அருகில் மதுக்கடைகள் திறந்து இருப்பதால், மது அருந்த வரும் குடிமகன்கள் நன்றாக குடித்து விட்டு பாட்டில்களை ரோட்டில் உடைத்து விட்டு செல்கிறார்கள். அத்துடன் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்கிறார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளை கடந்து செல்லவே மாணவிகள் பயப்படுகிறார்கள்.இந்த நிலை நீடித்தால் மதுவுக்குள் மனிதம் மூழ்கிப்போவது உறுதி. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பெயர் சொல்ல விரும்பாத கட்டிட தொழிலாளியான மது பிரியர் ஒருவர் கூறியதாவது:-

ஆரம்பத்தில் ஏதோ விளையாட்டாகத்தான் மது குடிக்க ஆரம்பித்தேன்.இப்போதெல்லாம் மது இல்லாமல் என்னால் இருக்கமுடியவில்லை.வேலைசெய்து கிடைக்கும் பணம் முழுக்க மதுக்கடைக்கு தான் போகிறது. முன்பு காலையில் வேலைக்கு செல்லும் போது மதுக்கடைகள் பூட்டி கிடக்கும்.இதனால் வேலைக்கு போய் விட்டு வந்து மாலையில் தான் குடிப்பேன்.இப்போது தாராளமாக மது கிடைக்கிறது.போன் செய்தால் போதும் வீட்டுக்கே கொண்டு வந்து தருபவர்களும் இருக்கிறார்கள்.பாட்டிலுக்கு நேரத்துக்கு தகுந்தபடி கூடுதல் தொகை கொடுக்க வேண்டும்.நமது டாஸ்மாக் கடைகளில் கிடைக்காத மது வகைகளை இவ்வாறு கொண்டுவந்தால் அதை கர்நாடகா,கேரளாவிலிருந்து கடத்திவந்து விற்பதாக கூறுகிறார்கள்.சிலர் காலியான மது பாட்டில்களை சேகரித்து அதில் போலிமதுவை ஊற்றி இப்படி கள்ளத்தனமாகவும் விற்கிறார்கள்.இப்படியும் ஒருபுறம் சம்பாதிப்பு நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள 266 டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் ரூ.5 கோடிக்கும் அதிகமாகதான் வருமானம் கிடைக்கிறது. இருந்தபோதிலும் எங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வதுடன், வழக்கத்துக்கு அதிகமாக மதுபானங்களை கடைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவற்றை விற்பனை செய்யவில்லை என்றால், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

இதனால்தான் நாங்கள் வேறு வழியின்றி அனுமதிக்கப்படாத நேரத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் செய்யாவிட்டால் நாங்கள் கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரத்தில் விற்பனை செய்ய மாட்டோம்.மது கடைக்கு வருபவர்கள் எத்தனை பாட்டில்கள் கேட்டாலும் கொடுப்போம்.இவற்றை அவர்கள் குடிப்பார்களா? அல்லது விற்பார்களா? என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வேலை செய்பவர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வது கிடையாது. அத்துடன் கூடுதல் மதுபானங்களை விற்பனை செய்யவும் நாங்கள் ஒருபோதும் சொல்வது கிடையாது. ஆனால் கடையில் வேலை செய்பவர்கள் தங்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துக்காக அனுமதிக்கப்படாத நேரத்தில் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்ட 7 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரத்தில் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இன்பமானலும்,துன்பமானாலும் பலரது வாழ்க்கையில் இப்போது மது ஒரு அங்கமாகிவிட்டது.தாராளமாக கிடைக்கும் மது வகைகளால் போதை பிரியர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது.இந்த கூட்டத்தில் கல்லூரி மாணவிகளும்,குடும்ப பெண்களும் கூட இணைந்து இருப்பதுதான் ஜீரணிக்க முடியாத விஷயம். இப்படி இருக்க மதுவிலக்கை கொண்டுவருவது சாத்தியமா? என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் சூலூர், கருமத்தம்பட்டி பகுதியில்தான் அதிகளவில் போலி மதுபானங்கள் தெருத்தெருவாக விற்பனை செய்யப் படுகிறது. அத்துடன் சாலையோரத்தில் உள்ள ஓட்டல்களிலும் மதுபானங்கள் தாராளமாக கிடைக்கிறது. போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் மாதம் மாதம் லட்சக்கணக்கான ரூபாய் சென்று விடுவதால் அவர்களும் கண்டுகொள்வது கிடையாது. சில கிராமங்களில் வீதிவீதியாக மதுபானங்கள் விற்கப்படுகிறது.

சுதந்திரதினம், குடியரசு தினம் உள்பட சில நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அத்துடன் விடுமுறை நாட்களில் கூட இந்த கடைகள் மூடப்படுவது இல்லை. பார்களில் மது விற்பனை செய்ய, ஒரு பாருக்கு ரூ.30 ஆயிரம் போலீசாருக்கு கொடுக்கப்படு வதாக கூறப்படுகிறது. அதை அவர்கள் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது ஏன், விடுமுறை காலங்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கலாமே?.

வெளிநாடுகளில் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே குடிப்பார்கள். அந்த அளவை தாண்டமாட்டார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை. சிலர் காலையில் எழுந்ததுமே வெறும் வயிற்றில் மது அருந்துவது உண்டு. அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு விடும்.இப்படி மதுவுக்கு அடிமையானவர்கள் இருக்கும்போது மது விலக்கை கொண்டுவர படிப்படியாகத்தான் முயற்சிக்க வேண்டும்.

முதல்கட்டமாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். ஆட்கள் நடமாட்டம் இல்லாத குடியிருப்பு பகுதிகள் இல்லாத இடத்தில் கடைகளை அமைக்க வேண்டும். கைக்கு எட்டும் தூரத்தில் மதுக்கடைகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.இதனால் சிலர் நீண்ட தூரம் அலைய விரும்பாமல் குடிக்காமலும் இருப்பது உண்டு. இதனால் பலர் திருந்தி வாழவும் வாய்ப்பு உள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மதுவிற்பனை என்ற நிலையை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.ஒருவர் எத்தனை பாட்டில்கள் என்றாலும் வாங்கலாம் என்ற நிலையை மாற்றவேண்டும்.போலி மதுபானங்கள் விற்பனை செய்தாலோ அல்லது சட்டவிரோதமாக மதுபானங்களை விற்றாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு நபர் மதுபானங்களை விற்றதாக 3 முறைக்கு மேல் கைதானால் அவரை ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிலான பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க முடியும். மதுபானங்களை ஒழிக்கவும் வழிவகுக்கும். அப்படி இல்லாமல் ஒருபுறம் மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு இன்னொரு புறம் மது விலக்கை அமல் படுத்துவது கள்ளசாராயம், போலிமது தாயாரிப்புக்கு வழிவகுக்கும்.பலரது உயிரை குடிக்கும்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story