காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதான கூட்டாளியுடன் ரவுடி டிராக் சிவா சிறையில் அடைப்பு


காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதான கூட்டாளியுடன் ரவுடி டிராக் சிவா சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 23 Sept 2018 5:30 AM IST (Updated: 23 Sept 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதான ரவுடி டிராக் சிவா, அவரது கூட்டாளியுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செஞ்சி சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி டிராக் சிவா உள்பட 2 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் முத்தியால்பேட்டை பகுதியில் ஆயுதங்களுடன் டிராக் சிவா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு டிராக் சிவா, தனது கூட்டாளி மூலக்குளம் பகுதியை சேர்ந்த மணிபாலனுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். இதில் டிராக் சிவாவை போலீசார் கைது செய்தனர்.

தற்போது டிராக் சிவாவின் கூட்டாளியான மணிபாலனையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர். டிராக் சிவாவை கைது செய்த முத்தியால்பேட்டை போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே பாண்டியன் கொலை குறித்து மேலும் விசாரிப்பதற்காக டிராக் சிவாவை பெரியகடை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Next Story