நிர்மலாதேவி விவகாரம்: சிலரை தப்பிக்க வைத்து வழக்கை முடிக்க போலீசார் முயற்சி, வக்கீல் பரபரப்பு வாதம்


நிர்மலாதேவி விவகாரம்: சிலரை தப்பிக்க வைத்து வழக்கை முடிக்க போலீசார் முயற்சி, வக்கீல் பரபரப்பு வாதம்
x
தினத்தந்தி 29 Sept 2018 5:00 AM IST (Updated: 29 Sept 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

நிர்மலாதேவி ஜாமீன் மனு விசாரணையின் போது, சிலரை தப்பிக்க வைத்து வழக்க முடிக்க போலீசார் முயற்சிப்பதாக வக்கீல் தெரிவித்தது ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை,

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் இறுதி விசாரணைக்காக நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று வந்தது.

அப்போது, பேராசிரியை நிர்மலாதேவி தரப்பில் வக்கீல் வத்திராயிருப்பு மகாலிங்கம் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:–

மனுதாரர் நிர்மலாதேவி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கும், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதாவது, மனுதாரர் பேசியதாக வெளியான ஆடியோவில் பாலியலுக்கு மாணவிகளை அழைக்கும் வகையில் எந்த ஒரு வார்த்தையும் இடம் பெற இல்லை. மாணவிகளை தங்களது பெற்றோருடன் வந்து சந்தியுங்கள்“ என்று ஆடியோவில் பேசியுள்ளார். ஆனால் பாலியலுக்கு அழைத்ததாக மனுதாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது சட்டவிரோதம்.

மேலும் கல்லூரி வளாகத்துக்கு வெளியில் மாணவிகளிடம் மனுதாரர் செல்போனில் பேசியுள்ளார். எனவே மாணவிகள் நேரடியாக போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் செய்துள்ளனர். இந்த புகார் குறித்து மனுதாரரிடம் கல்லூரி நிர்வாகத்தினர் விளக்கம் கேட்டு இருக்க வேண்டும். அதை கல்லூரி நிர்வாகத்தினர் செய்யாதது ஏன்? எனவே இந்த வி‌ஷயத்தில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. இந்த வழக்கை எதிர்கொள்ள மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.“

இவ்வாறு அவர் வாதாடினார்.

முருகன் தரப்பில் மூத்த வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, “மனுதாரர்கள் மீது திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிலரை தப்பிக்க வைக்க நினைத்து மனுதாரர்களை மட்டும் குற்றவாளிகளாக்கி, இந்த வழக்கை முடிப்பதற்கு போலீசார் முயற்சி செய்கின்றனர். மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கும்பட்சத்தில் அவர்களுக்கு கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளனர். எனவே முருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முருகன் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் தரப்பு வழக்கீல், இந்த வழக்கில் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு இருக்கிறது“ என்றார்.

மேலும், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

நிர்மலாதேவி உள்ளிட்டோரின் ஜாமீன் மனு விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், சிலரை தப்பிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாக கூறிய தகவல் ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story