கூடலூரில் போலீசார் சோதனை: நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் 4 வாலிபர்கள் கைது
கூடலூரில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் காரில் வந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கூடலூர் வனத்தின் கரையோரம் உள்ளது. இங்கு கடந்த சில வாரங்களாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஓவேலி, நாடுகாணி, பாட்டவயல், சோலாடி சோதனைச்சாவடிகளில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று நாடுகாணி சோதனைச்சாவடி வழியாக கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காரில் 4 பேர் இருந்தனர். அப்போது கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் இரவு பணியில் இருந்த போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் சம்பத்குமார், பிரகாஷ் மற்றும் போலீசார் காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது காருக்குள் சிறிய கத்தி மற்றும் தலையில் அணியும் முகப்பு விளக்கு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரின் என்ஜின் பகுதியில் 4 அடி நீள நாட்டுத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அதை போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து காரில் வந்த 4 பேரையும் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ஓவேலி பேரூராட்சி எல்லமலை பகுதிக்கு செல்வதாக தெரிவித்தனர். துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் குறித்து விசாரித்த போது காரில் மறைத்து வைத்திருப்ப தாக கூறினர். உடனே காரை மீண்டும் சோதனை செய்து 4 தோட்டாக்களை கைப்பற்றினர்.
இது தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் துப்பாக்கி, தோட்டாக்களை வைத்திருந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சைதலவி மகன் சித்திக் (வயது 23), அப்துல்ரகுமான் மகன் சையத்அலவி (27), இப்ராகீம் மகன் சாதிக் (23), மாரக்கர் மகன் அப்துல்ஹாக் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் 4 பேரும் வந்து இருக்கலாம் என கருதுகிறோம். ஆனாலும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்டவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் கூடலூரை சேர்ந்த சிலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.
துப்பாக்கி, தோட்டாக்களுடன் 4 வாலிபர்கள் கைதான சம்பவம் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.