கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது; சொகுசு கார், செல்போன்கள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக காரில் கஞ்சா கடத்திச் சென்ற கேரள வாலிபர்கள் 4 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 106 கிலோ கஞ்சா, சொகுசு கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை,
ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் நாகமலைபுதுக்கோட்டை பைபாஸ் ரோடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூடை, மூடையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த காரில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.
அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த அஸ்வின்(வயது 22), விஷால்(26), சமினாஸ்(22), அருண்(24) என்பதும், அவர்கள் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அங்கு கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். அப்போது ஒருவர் கஞ்சா விற்று அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று அவர்களிடம் கூறினார். அதை கேட்டு அவர்கள் ஒவ்வொருவரும் ரூ.25 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் ரூபாய் சேர்த்தனர். அந்த பணத்தை எடுத்து கொண்டு ஆந்திரா சென்று ராஜூ என்பவரிடம் கஞ்சா வாங்கினர்.
அந்த கஞ்சாவை கேரளாவிற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்க முடிவு செய்து, காரில் மதுரை வழியாக கேரளா நோக்கி சென்றனர். அப்போது தான் அவர்கள் பிடிபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 106 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.