காட்பாடி: ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு


காட்பாடி: ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 3 Oct 2018 10:30 PM GMT (Updated: 3 Oct 2018 9:04 PM GMT)

காட்பாடியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்பாடி,

காட்பாடியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3½ லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

காட்பாடி-வள்ளிமலை கூட்ரோடு காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51). இவருடைய மனைவி சுமதிராணி (46). இவர்களுடைய மகன் மகேஷ் (19), அப்பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வருகிறார். ரமேஷ் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் ரமேஷ் ஓட்டலுக்கும், மகேஷ் கல்லூரிக்கும் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் சுமதிராணி வீட்டை பூட்டி விட்டு ஓட்டலுக்கு சென்றார். மாலை 5 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டி பார்த்தார். அங்கு மர்மநபர் ஒருவர் பீரோவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டிருந்தார்.

இதையடுத்து அவர் வேக, வேகமாக ஓடிச்சென்று ஓட்டலில் இருந்த கணவர் ரமேசிடம் தெரிவித்தார். உடனடியாக ரமேஷ், ஓட்டலில் பணிபுரியும் தொழிலாளர்கள் சகிதம் வீட்டிற்கு வந்து மர்மநபரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்கு அந்த மர்மநபர் நகை, பணத்துடன் தப்பி சென்று விட்டார். ரமேஷ் வீட்டு பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.3½ லட்சம் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அருகேயுள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

திருட்டு பயம் காரணமாக ரமேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டின் முன்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) பொருத்தி உள்ளார். நேற்று அப்பகுதியில் பெய்த மழை காரணமாக அடிக்கடி மின்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி விடுமோ என்ற பயத்தில் சுமதிராணி அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் அணைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. கண்காணிப்பு கேமரா பொருத்தியும் தக்க சமயத்தில் அது பயன்படவில்லையே என்று ரமேஷ் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story