ராமநாதபுரத்தை கலக்கிய கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது
ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடுகளை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்வது தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொடர் திருட்டு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து கொள்ளை கும்பலை பிடிக்க ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் சிறப்பு குற்றபிரிவு சப்–இன்ஸ்பெக்டர் சிவசாமி, காவலர்கள் வலத்தீஸ்வரன், ராஜகோபால், பட்டாபிராமன், பாண்டியராஜன் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய தேனி மாவட்ட பகுதியை சேர்ந்த சிலர் ராமநாதபுரம் வந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்த தனிப்படை போலீசார் ரகசியமாக மாறுவேடத்தில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மீண்டும் கொள்ளை சம்பவத்தினை நிறைவேற்றும் நோக்கில் ராமநாதபுரம் வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் விடிய விடிய காத்திருந்து கண்காணித்து வந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தபோது கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனிமாவட்டம் உத்தமபாளையம் ஓடைப்பட்டி சத்யாநகர் பொன்னையா மகன் குமார்(வயது50), ஓடைப்பட்டி முத்துமாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ராசு மகன் சடையாண்டி(45), ஓடைப்பட்டி நந்தகோபால் தெருவை சேர்ந்த சுருளிவேல் மகன் ராஜன்(54) என்பது தெரிந்தது.
இவர்களிடம் நடத்திய சோதனையில் சிறிய உருளை கம்பிகளும், கதவினை உடைத்து திருடுவதற்கு தேவையான கடப்பாரை, கத்தி, வெட்டும் கருவி, டார்ச் லைட், கையுறை உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. இவர்கள் வைத்திருந்த சிறிய உருளை கம்பிகளை ஒன்றாக இணைத்தால் கடப்பாரை போன்று நீண்ட பெரிய ஆயுதமாக மாறி விடுகிறது. பகல் வேளைகளில் பூட்டி உள்ள வீடுகளை நோட்டமிட்டு இரவில் சென்று கதவை உடைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குற்ற செயல்களில் ஈடுபட்டு மதுரை சிறையில் இருக்கும் போது இந்த பகுதியை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டு அதன்அடிப்படையில் விவரங்களை சேகரித்து ராமநாதபுரத்தை கொள்ளையடிக்க தேர்வு செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் பகுதியில் மைமூனாராணி என்பவரின் வீட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந் இரவு வீடுபுகுந்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும், கடந்த மாதம் 9–ந் தேதி பட்டணம்காத்தான் பகுதியில் சைல்டுலைன் உறுப்பினர் ரமேசுவரி தனது மகளின் வீட்டிற்குசென்றிருந்தபோது வீடுபுகுந்து 21 பவுன்நகை, ரூ.4 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் இதுவரை 27½ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரொக்கம் முதலியவற்றை போலீசார் பறிமுதல்செய்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளில் சிலவற்றை கொள்ளையர்கள் விற்பனை செய்து அந்த பணத்தில் நிலம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக வீடுபுகுந்து நள்ளிரவில் கொள்ளையடித்து வந்த கும்பலை போலீசார் மடக்கிபிடித்துஉள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா பாராட்டினார்.