தொழிலாளி கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது


தொழிலாளி கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2018 4:30 AM IST (Updated: 6 Oct 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பெல் நரசிங்கபுரம் அருகே உள்ள சர்ச்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற வில்சன் (வயது 28). தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் தமிழ்செல்வி (2) என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு வீட்டை விட்டு சென்ற அருண்குமார், 3-ந் தேதி சிப்காட் மணியம்பட்டு அருகே ஏ.எஸ்.ஏ. நகர் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவரை யாரோ அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அருண்குமார் கொலைக்கு அவரது மனைவி ரம்யாவும், அவரது கள்ளக்காதலனுமே காரணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான சிப்காட் போலீசார் ரம்யாவையும், அவரது கள்ளக்காதலன் சிப்காட் சூர்யா நகர் பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (27) என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசாரிடம் தாமஸ் ஆல்வா எடிசன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நானும், அருண்குமாரின் மனைவி ரம்யாவும் உறவினர்கள். எனக்கு ரம்யா முறைப்பெண் ஆவார். நான் ரம்யாவை காதலித்தேன். ஆனால் ரம்யா, அருண்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இருந்த போதிலும் எனக்கும் ரம்யாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

எனக்கு ரம்யா முறைப்பெண் என்பதால் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வருவேன். நானும் ரம்யாவும் செல்போனிலும் பேசி வந்தோம். இது அருண்குமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அருண்குமார் என்னை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டேன். எனக்கு துணையாக எனது நண்பர்கள் சிப்காட் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார் (26), வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (24), மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த ரஜினி (22) ஆகியோரை சேர்த்துக்கொண்டேன்.

கடந்த 2-ந் தேதி இரவு அருண்குமார் உணவு வாங்குவதற்காக புளியந்தாங்கல் அருகே உள்ள ஓட்டலுக்கு வந்திருந்தார். இதை எதிர்பார்த்து காத்திருந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து அருண்குமாரை அடித்து உதைத்தோம். பின்னர் அவரை மணியம்பட்டு அருகே ஏ.எஸ்.ஏ.நகர் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் தூக்கி வீசினோம். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. நாங்கள் தூக்கி வீசியதில் அவர் இறந்திருக்கலாம் என்று  அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து சிப்காட் போலீசார் அருண்குமாரின் மனைவி ரம்யா, தாமஸ் ஆல்வா எடிசன், சங்கீத்குமார், சரத்குமார், ரஜினி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

கள்ளக்காதலன் தாமஸ் ஆல்வா எடிசன் மீது சிப்காட், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story