தமிழக–கேரள எல்லையில் கைதான மாவோயிஸ்டு தலைவரிடம் கோவை போலீசார் விசாரணை நடத்த முடிவு
தமிழக–கேரள எல்லையில் கைதான மாவோயிஸ்டு தலைவரிடம் கோவை கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
கோவை,
கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழக–கேரள எல்லையான அகழி, அட்டப்பாடி, நிலம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அவர்கள் நடமாடி வருகிறார்கள். இதைத்தடுக்க தண்டர்போல்டு என்ற சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தமிழக–கேரள எல்லையான அகழி அருகே மாவோயிஸ்டு தலைவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தண்டர்போல்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு தலைவரான கோவை புலியகுளத்தை சேர்ந்த டேனிஷ் என்கிற டேனிஷனை (வயது 28) கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் பாலக்காடு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இந்திரா அனுமதி அளித்தார். இதையடுத்து கேரள போலீசார் டேனிசிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையை சேர்ந்த டேனிஷ், ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தபோது திடீரென்று காணாமல்போய் விட்டார். கடந்த 3½ ஆண்டு களாக அவர் தலைமறைவாக இருந்தார். மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்த அவர் ஒரு பிரிவுக்கு தலைவராக மாறி செயல்பட்டு வந்துள்ளார். ஆனால் அவர் மீது கோவை மாநகர பகுதியிலேயோ, கோவை புறநகர் பகுதியிலேயோ எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் டேனிஷ் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர, கோவையை சேர்ந்த சிலர் உதவி செய்ததாக அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் டேனிஷ், கோவையை சேர்ந்த இளைஞர்கள் சிலரை மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்க்க மூளைச்சலவை செய்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே டேனிசை காவலில் எடுத்து விசாரித்தால், பல தகவல்கள் வெளியாகும் என்று கோவையை சேர்ந்த கியூ பிரிவு போலீசார் நம்புகிறார்கள். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளனர். இது குறித்து கியூ பிரிவை சேர்ந்த போலீசார் கூறியதாவது:–
கோவை புலியகுளத்தை சேர்ந்த டேனிஷ், கடந்த 2011–ம் ஆண்டே கல்லூரி படிப்பை முடித்து உள்ளார். பின்னர் அவர் மாவோயிஸ்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு மறைமுகமாக செயல்பட்டு வந்தார். கடந்த 3½ ஆண்டுகளுக்கு பின்னர்தான் அவர் அந்த இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பணியாற்றி தலைவராக மாறும் அளவுக்கு உயர்ந்து உள்ளார்.
மேலும் அவர் தன்னுடன் படித்த மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள மலையடிவார பகுதியில் உள்ள கிராமங்களில் இருக்கும் இளைஞர்களை சந்தித்து, அந்த இயக்கத்தில் சேரும்படி வலியுறுத்தி உள்ளார். தற்போது அதில் பல இளைஞர்களை காணவில்லை. எனவே அவர்கள் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தமிழக–கேரள எல்லையான அகழி பகுதியில்தான் அவர் ஆயுத பயிற்சி பெற்று உள்ளார். அவருக்கு ஆயுத பயிற்சி அளித்தது யார் என்பது தெரியவில்லை. எனவே அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் பல தகவல்கள் கிடைக்கும்.
தற்போது கேரள போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாலும், அடுத்த மாதம் 3–ந் தேதி வரை அவர், நீதிமன்ற காவலில் இருப்பதாலும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் அனுமதி கிடைக்காது. எனவே 3–ந் தேதிக்கு பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க பாலக்காடு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.