செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்னல் தாக்கி தொழிலாளி சாவு


செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்னல் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 Oct 2018 3:30 AM IST (Updated: 9 Oct 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி மின்னல் தாக்கி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

பெருமாநல்லூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருமாநல்லூர் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலியானார். இது பற்றிய விவரம் வருமாறு:–

திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 31). இவர் நியூதிருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் குருமூர்த்தியும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவினருமான சந்தோஷ்குமார் (21) ஆகிய 2 பேரும் நேற்று மாலை வீட்டில் சாப்பிட்டு விட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் பனியன் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சந்தோஷ்குமார் ஓட்டினார்.

பின்இருக்கையில் குருமூர்த்தி அமர்ந்து இருந்தார். அப்போது மழை பெய்தது. இதற்கிடையில் குருமூர்த்தி செல்போனில் பேசிக்கொண்டே சென்றதாக தெரிகிறது. இவர்களது மோட்டார் சைக்கிள் காளம்பாளையம் பகுதியில் ஒரு மரத்தின் அருகே சென்றபோது திடீரென்று மின்னல் தாக்கியது. இந்த அதிர்ச்சியில் 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதில் குருமூர்த்தியின் செல்போன் கருகியது. உடனே அருகில் உள்ளவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தோஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story