வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் ம.தி.மு.க.வினர் சாலை மறியல்
வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் ம.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோபாலை பார்க்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், வைகோவை தடுத்து நிறுத்தினார்கள். மேலும், கைது செய்யப்பட்ட கோபாலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், போலீஸ் நிலையம் முன்பு வைகோ தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ம.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று மதியம் 1.30 மணிஅளவில் ம.தி.மு.க. மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் கட்சியினர் திரண்டனர். அவர்கள் ஈ.வி.என்.ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன், சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயசித்ரா உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.