பல கோடி ரூபாய் மோசடி: நிதிநிறுவன இயக்குனரை மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


பல கோடி ரூபாய் மோசடி: நிதிநிறுவன இயக்குனரை மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Oct 2018 10:30 PM GMT (Updated: 15 Oct 2018 8:25 PM GMT)

பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன இயக்குனரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொன்.ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட 25 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

டெல்லி மற்றும் அரியானாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எச்.பி.என். டெய்ரி அலய்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் நாடு முழுவதும் பொதுமக்களிடம் டெபாசிட் வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான நபர்களிடம் இருந்து ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகை வசூலித்துள்ளனர். குறிப்பிட்ட நாள் நிறைவடைந்ததும் முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையை அந்த நிறுவனம் திருப்பி தரவில்லை. இதுகுறித்து முதலீட்டாளர்கள் போலீசில் புகார் செய்தனர். அந்த புகார்களின்பேரில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அமன்தீப்சிங்சரண், கைது செய்யப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் பணத்தையும், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்புக்காக வசூலித்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015–ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தமிழக முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ராய்ப்பூர் சிறையில் உள்ள அமன்தீப்சிங்சரணை கைது செய்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரின் நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்த பணத்தை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், “மனுதாரர்கள் முதலீடு செய்துள்ள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரை, அவர் மீதான வழக்கு விசாரணைக்காக 2 மாதத்திற்குள் கைது செய்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும்“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story