மீன்பிடிக்க சென்றபோது கடலில் மாயமான மீனவரை கண்டுபிடிக்க கலெக்டரிடம் மனு


மீன்பிடிக்க சென்றபோது கடலில் மாயமான மீனவரை கண்டுபிடிக்க கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 7:03 PM GMT)

கேரளாவில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் மாயமான மீனவரை கண்டுபிடித்து தரக்கோரி அவருடைய பெற்றோர் ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வேலவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகராஜ். இவர் தனது மனைவி வெள்ளையம்மாளுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்களின் மகன் மீனவர் கோவிந்தராஜ் (வயது26) என்பவர் கடந்த 9–ந் தேதி மீன்பிடிப்பதற்காக பாம்பனை சேர்ந்த கர்ணன் என்பவருடன் கேரளாவிற்கு சென்றார்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் விசைப்படகில் 14 பேருடன் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 12–ந் தேதி இரவு அதிக காற்று வீசிய நேரத்தில் சாப்பிட்டு விட்டு கைகழுவுவதற்காக சென்றபோது தவறி கடலில் விழுந்துவிட்டாராம். இதுகுறித்து உடன் சென்றவர்கள் மறுநாள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நாங்கள் குடும்பத்துடன் நேரில் சென்று விசாரித்தபோது கடலோர காவல் போலீசார் வழக்குபதிவு செய்து கடற்படையினர் உதவியுடன் தேடிவருவதாக கூறினர்.

எனது மகனின் கதி என்னவென்று தெரியவில்லை. எனது மகனை நம்பித்தான் மகள்களுக்கு கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளோம். எங்களை கடைசிவரை காப்பாற்றுவான் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில் எங்களை விட்டு சென்றுவிட்டான் என்று தெரிகிறது. இதனால் நாங்கள் சொல்ல முடியாத கவலையில் ஆழ்ந்துள்ளோம்.

எனவே, உடனடியாக மத்திய–மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து கடலில் மாயமான எனது மகனை தேடி கண்டுபிடித்து தர வேண்டும். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story