மதுரையில் தீபாவளியையொட்டி நள்ளிரவு 2 மணி வரை வியாபாரம் செய்யலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையில் தீபாவளி பண்டிகையையொட்டி நள்ளிரவு 2 மணி வரை வியாபாரம் செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த அசரப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரையை தூங்கா நகரம் என்று அழைக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்காக திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் மதுரைக்கு வந்து தங்களுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக தீபாவளிக்கு முன்னதாக 2 நாட்கள் இரவு முழுவதும் துணிகள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விற்பனை நடக்கும். இந்த வியாபாரத்தை நம்பி தான் வியாபாரிகள் கடன் வாங்கி முதலீடு செய்கிறார்கள்.
ஆனால் கடந்த 2 வருடங்களாக தீபாவளி சமயங்களில் இரவு 11 மணிக்கு எல்லா கடைகளையும் மூட வேண்டும் என்று போலீசார் தொந்தரவு செய்கிறார்கள். இதன்காரணமாக கடந்த 2 வருடங்களாக வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். தீபாவளியையொட்டி இந்த வருடமும் வியாபாரிகள் தங்களது தொழிலில் ஏராளமான தொகையை முதலீடு செய்துள்ளனர். ஆனால் போலீசார் இரவு 11 மணிக்கு கடைகளை மூட சொன்னால் அவர்கள் முதலீட்டு தொகையை இழக்க நேரிடும். எனவே இந்த வருடம் தீபாவளிக்கு முன்பு 2 நாட்களுக்கு இரவு முழுவதும் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், தீபாவளிக்கு முன்னதாக 2 நாட்களில் நள்ளிரவு 2 மணி வரை வியாபாரிகள் தங்களது கடைகளை நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.