நீர் வளத்தை பாதுகாக்க கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க தடை அரசு; பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


நீர் வளத்தை பாதுகாக்க கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க தடை அரசு; பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2018 11:00 PM GMT (Updated: 30 Oct 2018 10:55 PM GMT)

நீர் வளத்தை பாதுகாக்க கண்மாய், குளங்களில் மீன்கள் வளர்ப்பதை தடை செய்வது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ராஜா மற்றும் கிருஷ்ண ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வைகை ஆறு, கிருதுமால் நதி, மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், வண்டியூர் கண்மாய் உள்பட பல்வேறு கண்மாய் ஆக்கிரமிப்புகள் குறித்து வக்கீல்களும், மனுதாரர்களும் நேரில் வந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டி.ஆர்.ஓ. ஏன் வரவில்லை என்று அரசு தரப்பு வக்கீலிடம் விளக்கம் கேட்டனர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ.க்கள் நாளை(புதன்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் நீர்நிலை மேலாண்மை குறித்து துறை சார்ந்த வல்லுனர்களிடம் ஏற்கனவே அறிக்கை கேட்டுள்ளோம். வண்டியூர் கண்மாயை 2 மீட்டர் அளவு ஆழப்படுத்தினால் 3 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் என்றனர்.

வக்கீல்கள் தரப்பில், ராமநாதபுரம், கடலாடி மற்றும் சாயல்குடி ஆகிய பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீரை அந்த பகுதி மக்கள் ரூ.30 கொடுத்து விலைக்கு வாங்கி குடிக்கின்றனர். ஆனால், இந்த வருடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை பெய்துள்ளது. முறையான நீர் மேலாண்மை இல்லாததால் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

மேலும் மத்திய அரசு நீர் மேலாண்மைக்காக சென்ற ஆண்டு மதுரை மாவட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றும், அந்த நிதியை பயன்படுத்தி நீர் மேலாண்மைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது நீதிபதிகள், நர்மதா ஆற்றின் குறுக்கே சுமார் 9 கி.மீ. நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண கண்மாய், ஆறு, குளங்களை மேம்படுத்த முடியாதா என்று கேள்வி எழுப்பினர்.

கண்மாய்களில் மீன் வளர்ப்பதால் நீர் வளம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. மீன்கள் முழுவதையும் பிடித்த பின்பு கண்மாய் நீரை திறந்து விட்டுவிடுகின்றனர். இதனால் நீர் வீணாகிறது. எனவே கண்மாய், குளங்களில் மீன் வளர்ப்பதை ஏன் தடை செய்யக்கூடாது என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story