ஓசூர் காதல் தம்பதி ஆணவ கொலை வழக்கில் பெரியப்பா உள்பட மேலும் 3 பேர் கைது


ஓசூர் காதல் தம்பதி ஆணவ கொலை வழக்கில் பெரியப்பா உள்பட மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 10:15 PM GMT (Updated: 20 Nov 2018 9:44 PM GMT)

ஓசூர் காதல் தம்பதி ஆணவ கொலை வழக்கில் பெண்ணின் பெரியப்பா உள்பட மேலும் 3 பேரை கர்நாடக போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நந்தீஸ் என்பவர் சுவாதி என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியை கடந்த 10-ந் தேதி இரவு கடத்திய பெண்ணின் உறவினர்கள் அவர்களை கொடூரமாக கொலை செய்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றில் உடல்களை வீசினார்கள்.

இது தொடர்பாக கர்நாடக மாநிலம் மாண்டியா தாலுகா பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தார். இந்த கொலை தொடர்பாக பெண்ணின் மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45), உறவினர் வெங்கட்ராஜ் (25), கார் டிரைவர் சாமிநாதன் (30) ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக பெண்ணின் பெரியப்பா அஸ்வதப்பா, உறவினர் வெங்கட்ராஜ் மற்றும் ஏற்கனவே கைதாகி உள்ள கிருஷ்ணனின் நண்பர் லட்சுமணன் ஆகிய 3 பேரை பெலகவாடி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் மாண்டியா போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரகாஷ் தேவராஜ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நந்தீஸ் - சுவாதி தம்பதியை கடத்தி செல்ல உதவிய கார் டிரைவரான பலவனப்பள்ளியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த ஆணவ கொலை வழக்கில் இதுவரை பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பெலகவாடி போலீசாரிடம் கேட்ட போது, கைதான 6 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த இரட்டை கொலையில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். 

Next Story