ஈரோட்டில் ரூ.5 கோடியில் புதிய சரக்கு முனையம் - சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்


ஈரோட்டில் ரூ.5 கோடியில் புதிய சரக்கு முனையம் - சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:15 PM GMT (Updated: 2018-11-22T03:41:04+05:30)

ஈரோட்டில் ரூ.5 கோடியில் புதிய சரக்கு முனையம் அமைக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நடைமேடை பகுதி, பார்சல் அலுவலகம், டீசல் என்ஜின் பணிமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீட்டில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் சோதனை இயக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. மிக விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 2 மற்றும் 3-வது நடைமேடைக்கு பயணிகள் எளிதில் சென்று வரமுடியும்.

இதேபோல் ஒன்று மற்றும் 2-வது நடைமேடைகளுக்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. ஈரோடு ரெயில் நிலையத்தில் ரூ.5 கோடி செலவில் கூடுதலாக ஒரு சரக்கு முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும்.

மேலும் ஈரோடு ரெயில் நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 55 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் தொடக்க நிலையில் உள்ளது.

இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் கூறினார்.Next Story