குண்டாற்றுப் படுகையில் மணல் திருட்டு: மறு ஆய்வுக்கு ஒப்புதல் மனு தாக்கல் செய்ய உத்தரவு


குண்டாற்றுப் படுகையில் மணல் திருட்டு: மறு ஆய்வுக்கு ஒப்புதல் மனு தாக்கல் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் குண்டாறு, கிருதுமால் நதிப் படுகைகளில் மணல் திருட்டு தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையினை நிராகரித்த மதுரை ஐகோர்ட்டு, இது தொடர்பாக மறு ஆய்வுக்கு ஒப்புதல் மனு தாக்கல் செய்யுமாறு குவாரி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள குண்டாறு மற்றும் கிருதுமால் நதிப்படுகைகளில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக குண்டாறு, கிருதுமால் நதி ஆற்றுப்படுகைகளில் நேரடி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதா ஆற்றுப்படுகைகளில் நேரடியாக ஆய்வு செய்து ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மணல் திருட்டு தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தாக்கல் செய்த ஆய்வு அறிக்கை திருப்தி அளிக்க வில்லை என்றும், இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகம் தந்த தகவல்களின் அடிப்படையில் உள்ளது என்றும் கூறிய நீதிபதிகள் இந்த அறிக்கையை நிராகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதில் விதிமீறல் ஏதும் இல்லை என்றும், மணல் திருட்டு நடைபெற வில்லை என்றும் குவாரி உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. அப்போது வக்கீல் கமி‌ஷனரை நியமித்து ஆற்றுப்படுகைகளில் மறுஆய்வு செய்ய ஒப்புக்கொள்கிறீர்களா என நீதிபதிகள் கேட்டனர். இதனை குவாரி உரிமையாளர்கள் தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வக்கீல் கமி‌ஷனரை நியமனம் செய்து குண்டாறு, கிருதுமால் நதி ஆற்றுப்பகுதிகளில் மனுதாரர்களின் முன்னிலையில் ஆய்வு செய்ய ஒப்புதல் அளித்து வருகிற 26–ந்தேதி மனு தாக்கல் செய்யுமாறு குவாரி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story