விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Dec 2018 4:00 AM IST (Updated: 6 Dec 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த தன்னாசி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எனக்கு சொந்தமாக ராமநாதபுரம் ஊ.கரிசல்குளம் பகுதியில் பட்டா நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த பகுதியில் உள்ள நிலங்களில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். நாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி பிழைத்து வருகிறோம். இந்தநிலையில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் சார்பில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக நிலம் கையகப்படுத்தி உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக எனது விவசாய இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் முயற்சியில் தனியார் நிறுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எனது இடத்தில் உயர் மின் கோபுரம் அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும்.

எனவே எனது நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பவானிசுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கே.நீலமேகம், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

விசாரணை முடிவில், மனுதாரருக்கு சொந்தமான நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை அடுத்த மாதம் 3–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story