30 அடி பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டம் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தல்


30 அடி பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டம் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 5:16 PM GMT)

மயிலாடுதுறை அருகே மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி 30 அடி பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பனம்பள்ளி கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட மாயூரநாதர் கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக 325 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கிராம மக்கள் குத்தகை செலுத்தி, நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் ஒரு பகுதி நிலத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் விவசாயம் செய்வதாக கூறி கிரயத்துக்கு வாங்கி உள்ளனர். ஆனால் வாங்கிய நிலத்தில் விவசாயம் செய்யாமல், நிலத்தில் இருந்து களிமண் எடுத்து செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.


மேலும் களிமண் பரப்புக்கு கீழே உள்ள மணலையும் 30 அடி ஆழத்துக்கு தோண்டி எடுத்து ஆற்று மணல் என கூறி வியாபாரம் செய்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்கவும், மணல் கொள்ளையை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கற்களை ஏற்றி வந்த டிராக்டரை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் மணல் கொள்ளையால் ஏற்பட்டுள்ள 30 அடி பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அரை மணி நேரம் நீடித்தது.


இதுகுறித்து பனம்பள்ளி கிராம மக்கள் கூறியதாவது:– மணல் கொள்ளை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்ததால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லை.

செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை மணல் எடுத்த பகுதியையும் சமன்படுத்தி தரவேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Next Story