நம்பியூரில் கல்லூரியில் கம்ப்யூட்டர்கள் திருடிய 3 பேர் கைது; 17 கம்ப்யூட்டர்கள்– வேன் பறிமுதல்
நம்பியூரில் கல்லூரியில் கம்ப்யூட்டர்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 17 கம்ப்யூட்டர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
நம்பியூர்,
ஈரோடு மாவட்டம் நம்பியூர் புதுசூரிபாளையம் பகுதியில் தற்காலிகமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த கல்லூரியின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், முதல்வர் அறையின் அருகே உள்ள கம்ப்யூட்டர் அறையில் வைக்கப்பட்டு இருந்த 3 கணினிகள் திருடிச்சென்றனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே கல்லூரியில் 9 கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டன. இதுகுறித்து நம்பியூர் போலீசில் கல்லூரி நிர்வாகத்தினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அந்த கல்லூரியை சோதனை செய்ததோடு, விசாரணை நடத்தி வந்தனர். வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சத்தியமூர்த்தி, மணிகண்டன், ஜெயபால், ரவி ஆகியோர் கம்ப்யூட்டர்களை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நம்பியூர் போலீசார் நேற்று கெட்டிச்செவியூர் அரளிமலை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வேகமாக வந்தது. இதனால் அந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனுக்குள் 3 பேர் இருந்தனர். மேலும், 6 கம்ப்யூட்டர்கள் இருந்தன.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனுக்குள் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் 3 பேரும், கோபி சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்த விருமாண்டி (வயது 50), அவருடைய மகன் திவாகர் (24) மற்றும் பெரியசாமி என்கிற அர்ச்சுனன் (43) என்பதும், அவர்கள் வேனில் வைத்திருந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தும் நம்பியூர் கலை அறிவியல் கல்லூரியில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதேபோல் தோட்டம்பாளையம் அரசு பள்ளிக்கூடத்திலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து கம்ப்யூட்டர்களை திருடியதும் தெரிந்தது.
மேலும் விருமாண்டி மீது திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 6 கம்ப்யூட்டர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை முதற்கட்டமாக பறிமுதல் செய்தனர். மேலும் மற்ற கம்ப்யூட்டர்கள் எங்கே என்று திருடர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது மற்ற கம்ப்யூட்டர்கள் கோபி பச்சைமலை ரோட்டில் உள்ள விருமாண்டியின் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் 11 கம்ப்யூட்டர்கள் இருந்தன. அதன்பின்பு அந்த கம்ப்யூட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு நம்பியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மற்றும் பள்ளியில் கம்ப்யூட்டர்களை திருடி விருமாண்டி, திவாகர், பெரியசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரையும், போலீசார் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.